"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு"

சில பாடல் வரிகளை எல்லோரும் பயன்படுத்துவோம் ,ஆனால் அதை எழுதிய கவிஞர் யாரென்று தெரியாது.அந்த வகையில் "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு" என்ற இந்த வரிகள் பிரபலமானது போல, இந்த வரியின் சொந்தக்காரர் யாரென்று பலருக்கும் தெரியாது.பலர் இந்த வரி பாரதிதாசனுடையது எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஏனென்றால் பலரின் எண்ணம் "தமிழன்" என வந்தால் பாரதிதாசன்,மொழி என வந்தால் பாரதி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; என்பது பொன்மொழிபோல சொல்லப்பட்டது அல்ல.ஒரு முழு பாடலின் முதல் வரிதான் அது.இதை எழுதியவர் "நாமக்கல் கவிஞர்
இராமலிங்கம் பிள்ளை".அந்த புகழ் பெற்ற வரியின் முழுபாடல் இதோ.
தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ; அன்பே அவனுடை மொழியாகும்.
அறிவின் கடலைக் கடைந்தவனாம்; அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் ; கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான் ;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம் புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.
'பத்தினி சாபம் பலித்துவிடும்' பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச் செய்தவன் துறவுடை ஓரரசன்.
சிந்தா மணி,மணி மேகலையும், பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின் நாகரி கத்தினை மிகக்காட்டும்.
தேவா ரம்திரு வாசகமும் திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள் உரைகளும் தமிழன் வாழ்வாகும்.
தாயும் ஆனவர் சொன்னவெலாம் தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார் பாடலும் தமிழன் பெட்பெனலாம்.
நேரெதும் நில்லா ஊக்கமுடன் நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன் பாடலும் தமிழன் தரும்புகழாம்.
கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்.
சிற்பம் சித்திரம் சங்கீதம் சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல் வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.
உழவும் தொழிலும் இசைபாடும்; உண்மை ; சரித்திரம் அசைபோடும் ;
இழவில் அழுதிடும் பெண்கூட இசையோ டழுவது கண்கூடு.
யாழும் குழலும் நாதசுரம் யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும் வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.
'கொல்லா விரதம் பொய்யாமை கூடிய அறமே மெய்யாகும் ;
எல்லாப் புகழும் இவைநல்கும் ;' என்றே தமிழன் புவிசொல்லும்.
மானம் பெரிதென உயிர்விடுவான் ; மற்றவர்க் காகத் துயர்படுவான் ;
தானம் வாங்கிடக் கூசிடுவான் ; 'தருவது மேல்' எனப் பேசிடுவான்.
ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம் ;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும் நிறைகுறை யாமல் செய்தவனாம்.
உத்தமன் காந்தியின் அருமைகளை உணர்ந்தவன் தமிழன் ; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான் ; சாந்தம் தவறா துடனிருந்தான்.
Download As PDF

4 கருத்துரைகள்:
nalla pathivu. good job
நண்பர் மதுரை சரவணன் அவர்களே!பின்னூட்டம் மூலம் தங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
அருமையான பாடல்
நன்றி எசாலத்தான்.
நண்பர் சீனுவின் முதல் வருகைக்கும் - கருத்துக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்
கருத்துரையிடுக